சென்னை, ஜூன், 2021 – சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையுடன் இணைந்து ஆதரவற்ற மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கும் திட்டத்தை துவங்கியது ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை. இரண்டாவது கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஏப்ரல் 2021 இல் ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை ஆக்ஸிஜன் ஃபார் இந்தியா என்னும் பிரச்சாரத்தை துவங்கியது.
15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட, ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை சென்னையில் ஐந்து பள்ளிகள், ஒரு பால்வாடி மற்றும் ஒரு தொழிற்ப்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த அறக்கட்டளை 35’700 குழந்தைகளுக்கு ஆதரவளித்துள்ளதுடன், 6 மில்லியன் உணவு பொட்டலங்களையும் விநியோகித்துள்ளது. சென்னையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பற்றாக்குறையின் காரணமாக, ஆக்ஸிஜன் தேவைப்படும் ஏழை மக்களுக்கு சிறந்த முறையில் உதவ சென்னையை சேர்ந்த செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை. நன்கொடையாளர்களின் ஆதரவு மற்றும் கள ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன் மே மாதத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் முதல் விநியோகம் நிறைவடைந்தது.
இது குறித்து ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கெளரவத் தலைவர் பிரான்சுவா ஸ்டர்ட்ஸா கருத்து தெரிவிக்கையில், உலக முன்னணி விருந்தோம்பல் வணிக பள்ளியான லெஸ் ரோச்சஸ், கார்னர் வங்கி, லெட்டூ புக்ஸ், யூக்கா ஐடி சொல்யூஷன், மீடியோகிராஃபிக் நிறுவனம் போன்ற எங்கள் கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்கள் உதவியுடன் சென்னையில் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு உதவும் “இந்தியாவுக்கான ஆக்ஸிஜன்” என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
ஹார்ட் ஃபார் இந்தியாவின் முன்முயற்சியை ஆதரித்த கூட்டாளர்களில் ஒருவரான சர்வதேச விருந்தோம்பல் பள்ளியான லெஸ் ரோச்சஸின் சேர்க்கை இயக்குநர் மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் திரு அட்ரியன் ஆர்டிமோவ் கூறுகையில், லெஸ் ரோச்சஸ் இந்தியாவுடன் வலுவான பிணைப்பைக் கொண்டிருப்பதால், ஹார்ட் ஃபார் இந்தியாவின் முன்முயற்சியை ஆதரிக்க நாங்கள் விரும்பினோம். எங்களால் இயன்றதை இந்த சமூகத்திற்க்கு செய்ய தயாராகவுள்ளோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும் என்று கூறினார்.