சென்னை, ஜூன் , 2021: டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா , சுதந்திரமான வர்த்தக நடைமுறையில் இந்த சமூகத்தை ஒரு விற்பனை பொருளாக மட்டும் பார்க்காமல் அதன் அங்கமாக மாறுவதுதான் வர்த்தகத்தை அர்த்தமுள்ளதாக்கும் என்றார். இந்த கருத்தை செயல்படுத்தும் விதமாக தெற்கு ஆசியாவில் மிகப்பெரும் ஹோட்டல் குழுமமாக திகழும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக அயராது பாடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இதுவரையில் 10 லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளதாகவும், இது க்யூமின் தளம் மூலம் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவன மனித வள சர்வதேச பிரிவின் மூத்த துணைத் தலைவர் கவுரவ் பொக்ரியால் கூறியதாவது: தாஜ் குழுமம் பின்பற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் வழியில், வர்த்தக நடைமுறையானது சமூகத்துடன் இணைந்த அங்கமாக இருக்கும்போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதற்கேற்பவும், கொரோனாவுக்கு எதிராக நாடு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் கொரோனாவுக்கு எதிராக அயராது பாடுபடும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற சேவைக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் நடவடிக்கையானது 10 மாநிலங்களில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூரு, புதுடெல்லி, வாராணசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.
“கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மருத்துவப் பணியாளர்களுக்கு மேலும் சுமையாக அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சத்தான உணவு வகைகளை க்யூமின் வழங்கியது. இதன் மூலம் மருத்துவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் நோயாளிகளின் மீது கவனம் செலுத்த வழியேற்பட்டது. இந்த வகையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மருத்துவ சமூகத்துக்கு உறுதுணையாக இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனம் செயல்பட்டது, ‘’ என்று கஸ்தூர்பா மருத்துவமனை டாக்டர் சந்திரகாந்த் பவார் தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு ஏற்பட்ட முதலாவது அலையின் போது மருத்துவப் பணியாளர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் 30 லட்சம் உணவுப் பொட்டலங்களை நாடு முழுவதும் விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.