நல்லாயன் இல்ல நூற்றாண்டுவிழா

நல்லாயன் இல்ல நூற்றாண்டுவிழா

சென்னை, பிப்ரவரி மத்திய சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் 1924ம் ஆண்டு முதல் இயங்கிவரும் நல்லாயன் மாரியன் இல்லம் மற்றும் மொட்டுக்கள் இல்ல நூற்றாண்டுவிழா காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

1835ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் புனித மேரி யுப்ரேசியாவால் தொடங்கப்பட்டதுதான் ‘அன்பின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நல்லாயன் சபை’ [Congregation of Our Lady of Charity of the Good Shepherd]. 1854ம் ஆண்டு இந்தியாவில் காலடி பதித்த இச்சபை 1924ல் சென்னையில் தன் முதல் கன்னியர்  இல்லத்தை நிறுவியது. “ஒரு மனிதன் இந்த முழுவுலகத்தையும் விட விலை மதிப்புமிக்கவன்” என்னும் தங்கள் நிறுவனரின் பொன்மொழியைத் தங்களின் பணி வாழ்வின் விருதுவாக்காக்கி ஆற்றுப்படுத்துதல் பணியாற்றத் தொடங்கினர்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே
 (பாரதிதாசன் கவிதைகள், ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, ஆண் பெண் சமத்துவம், வரதட்சணைக் கொடுமை இவற்றுக்காய்த்தலைவர்கள் களத்தில் இறங்கிப் போராட, கவிஞர்களோ தங்களின் கவிதைகளின் வழியே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் நல்லாயன் சபை அருட்சகோதரிகள் முரண்பட்ட சமுதாயத்தில் வாழ்ந்த பெண்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றத் தொடங்கினர். 

ஆதரவற்ற பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்டோர், பேருந்து நிலையங்கள் இரயில் நிலையங்களில் யாருமற்ற நிலையில் கலங்கி நின்றோர், ஒற்றை பெற்றோரின் பிள்ளைகள், தற்கொலைக்கு முயன்றோர், விளிம்புநிலையில் வாழ்வோர், கல்வி கற்க வசதி இல்லாதோர், மனித கடத்தலுக்கு ஆளானோர், தமிழ்நாட்டின் குக்கிராமங்களிலிருந்து வந்தோர் என பல்வேறு காரணங்களால் அல்லலுற்ற பெண்களுக்காய் ‘மாரியன் இல்லத்தைத்’ தொடங்கினர். 

தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த பிள்ளைகளுக்குக் கல்வியோடு, கைத்தொழில், தற்காப்பு கலைகள்,  சான்றிதழுடன் கூடிய தையல் பயிற்சி, சமையல் கலை, தோட்டக்கலை மட்டுமல்லாமல் பெண்கள் படிக்க நினைத்த ஆசிரியர் பயிற்சி, இளங்கலை முதுகலைப் பட்ட படிப்புகள், செவிலியர் பயிற்சி, பட்டயப் படிப்புகள் என மிகச்சிறந்த தரமான கல்வி அறிவு பெற அருட்சகோதரிகள் உதவினர். இவ்வில்லத்தில் பயின்ற பெண்கள் இன்று இந்தியா மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். ஏட்டுக் கல்வியோடு பிறரன்பு, மனிதநேயம், இயற்கையைப்பாதுகாத்தல் மற்றும் நாட்டுப்பற்றும் இங்கு கற்பிக்கப்பட்டன. 

நல்லாயன் சபை அருட்சகோதரிகளின் சமுதாயப் பணியின் மற்றுமொரு பரிமாணமே 1970ல் ‘பிரியவனம்’ என உருவான இன்றைய ‘மொட்டுக்கள்’. பால்குடி மறவா குழந்தைகள் கூட அருட்சகோதரிகளின் வழியாகத் தாயின் அரவணைப்பைப் பெற்றனர். பள்ளிக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தடையின்றி பெற்றிட வழிவகை செய்து தந்தனர் அருட்சகோதரிகள். இங்கு வளர்ந்த பெற்றோரின் முகமறியா அநேக குழந்தைகளின் பெற்றோராகி  வாழ்வின் எச்சூழலையும் சந்திக்கும் தைரியம், சுயசிந்தனை உணர்வு, சகோதரத்துவம், தற்சார்பு போன்ற நேர்மறையான எண்ணங்களை அவர்களிலே விதைத்தனர். 

 சமுதாய நோக்கோடு செயல்பட்டுவரும் இவ்வில்லங்களின் நூற்றாண்டுவிழாதான் நேற்று கொண்டாடப்பட்டது.  மதுரவாயிலில் செயல்பட்டுவரும் ‘Children Home of Hope’ இல்லத்தின் செயலர் திருமதி. ஷோபனா தாமஸ் சிறப்பு விருந்தினராகவும் நல்லாயன் சபை மத்திய கிழக்கு இந்தியா நேபாள மாகாணத் தலைவி அருட்சகோதரி புஷ்பா லூயிஸ் கௌரவ விருந்தினராகவும் அருட்பணி. வின்சென்ட் சேவியர் SDB, CWC Chairperson திரு. ராஜ்குமார், நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. கருணாகரன், ஆடிட்டர் முனைவர். திரு. கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர். மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நல்லாயன் சபை அருட்சகோதரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

​​​​விழாவின் நாயகிகளான மாரியன் இல்லம் மற்றும் மொட்டுக்கள் இல்ல மேனாள் மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்துகொண்டதோடு, கூடுகளுக்குத் திரும்பிவந்த வேடந்தாங்கல் பறவைகளாய் வளாகம் முழுவதும் சுற்றித் திரிந்து நண்பர்களோடு உரையாடி மகிழ்ந்தனர். நூற்றாண்டுவிழாவின் மையமாக இவ்வில்லங்களைப் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. கலந்துகொண்ட மாணவியரிடம் நேர்காணல் நிகழ்த்தப்பட்து. 

 நல்லாயன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியச் சங்க உறுப்பினர்களால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்குப் பரிசுகளும் மாரியன் இல்லம் மற்றும் மொட்டுக்கள் இல்ல மேனாள் மாணவிகள் அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தேநீர் விருந்துடன் நூற்றாண்டு விழா இனிதே நிறைவுபெற்றது. 

சமுதாய மேம்பாடு, மகளிர் முன்னேற்றம் இவற்றுக்காய்ச் சேவையாற்றும் இந்நிறுவனம் நூற்றாண்டுகள் பல காண வாழ்த்துகிறோம்.