கங்கா ஸ்நானம் -ஆச்சா

தீபாவளியன்று பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ‘கங்காஸ்நானம்’ முறைகளையும், அதன் பயன்களையும் பற்றி திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் சித்த மருத்து அலுவலரும் ( பொறுப்பு),அரசு சித்த மருத்துவக் கல்லூரி நோய் நாடல் பட்டமேற்படிப்பு துறை மரு. பாஸ்கர் இராஜமாணிக்கம் அவர்கள் திருவண்ணாமலை சித்தர்களின் குருபாரம்பரிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் கௌரி விரதத்தில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் குளியல் ‘கங்காஸ்நானம்’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை இன்றுவரை ஞாபகப்படுத்தி வருவது தீபாவளி பண்டிகை மட்டுமே. தற்காலத்தில் பலவிதமான நோய்கள் பெருகி வருவதற்கும், இளமையிலேயே நோய்கள் வருவதற்கும் இந்த எண்ணெய் குளியல் முறையை நாம் மறந்து வருவதுதான் காரணமாகும்.

தெய்வங்களுக்கு ‘எண்ணெய்க்காப்பு’ செய்யும் முறையை இன்றுவரை வழக்கத்தில் கடைபிடித்து வருகிறோம். இதன் மூலமே இதன் முக்கியத்துவத்தையும், முன்னோர்களின் அறிவுரையையும் அறியலாம். தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது தமிழ் மரபு.

இத்தினத்தில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் குளியலால் நம் உடலில் உள்ள சக்தி ஆற்றலானது சிவ ஆற்றலுடன் சேர்ந்து நம் உடலில் மன வலிமை மற்றும் உடல் நலத்தை அதிகப்படுத்துகிறது என்பது சித்தர்களின் சூட்சும தகவல்.

நரகாசுரன் இறந்ததை கொண்டாடும் விதமாக மேற்கொள்ளப்படும் எண்ணெய் குளியலில் எண்ணெயில் லட்சுமி தேவியும், குளிக்கப் பயன்படுத்தும் வெந்நீரில் கங்காதேவியும், உடலில் எண்ணெயை போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய் பொடியில் வாயுபகவான் எழுந்து அருள்வதாக நம் முன்னோர்களின் ஐதீகம். இக் குளியலால் நரக பயமோ, அகால மரணமோ,நோயோ ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று நரகாசுரனின் அம்மா பூமாதேவி வரம் வாங்கித் தந்தால் என்பதும்,இந்துக்களின் நம்பிக்கை

பயன்படுத்தும் எண்ணெய்

நல்லெண்ணெய்

குளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மூலம் கர்மகாரகன் சனீஸ்வரன் பிடியிலிருந்து விடுபடலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

குளியல் நேரம்

விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை

தேய்க்கும் முறை

ஒவ்வொரு காதுக்கு மூன்று துளி, மூக்கில் இரண்டு துளி,பின்பு கண்ணிற்கு விட்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு எழும்பாமல் தேய்த்து 30 முதல் 40 நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பின்பு சீக்காய் தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்கலாம். குளிக்கும் வெந்நீரில் மாவிலைக் கொத்து 2 அல்லது 3 விட்டு காய்ச்சி குளிக்கலாம்.

எண்ணெய் குளியல் முடித்து அன்று குளிர்காற்று, குளிர்ச்சியான பொருட்கள், வெயிலில் திரிதல், மாலை உறக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தீபாவளிக்கு முதல் நாள் இரவு குளிக்கத் தேவையான நல்லெண்ணெயில் ஓமம்,மிளகு,மஞ்சள் பொடி,வெற்றிலை போட்டு காய்ச்சி எடுத்து வைக்கவேண்டும் மறுநாள் அதிகாலை இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

தீபாவளி அன்று எண்ணெய் குளியல் மேற்கொண்டு பாரம்பரிய முறைப்படி உணவு வகைகளை அருந்தி வந்தால் எந்த நோயும் அணுகாமல் வாழலாம். நோய்நொடி இல்லா குடும்பத்தையும், வரும் தலைமுறையையும் உருவாக்கலாம். இறுதியாக, “வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *